Thursday, 2 July 2015

சமபாலுறவு, மூன்றாம் பாலினம், திருமண சமவுரிமை

சமபாலுறவாளர்களை (ஓரினச்சேர்க்கை என்கிற வார்த்தை பிரயோகம் தவறானது) அமெரிக்கா நாட்டின் உச்ச நீதிமன்றம் சட்டரீதியாக அங்கீகரித்த பின்னர் சமூக வலைத்தளங்களில் பரம்புகின்ற உணர்ச்சி வெளிப்பாடுகளை பார்க்கையில் எழுத தோன்றியது. 
எச்சரிக்கையும் பொறுப்பு துறப்பும் (Warning & Disclaimer): இவ்வாரத்தில் தொடர்ச்சியாக சமபாலுறவு பற்றிய நிலைத்தகவல்களே வர இருப்பதனால், அதை அறிவு ரீதியாக, தர்க்கத்தின் அடிப்படையில் அணுக விரும்புபவர்கள் மட்டும் மேற்கொண்டு வாசிக்கலாம், மற்றையவர்கள் இதனை வாசிக்காமல் இருப்பது மன அமைதிக்கும் உங்களது நம்பிக்கைக்கும் நல்லது. இல்லை என்று வீம்புக்கு வாசித்துவிட்டு இப்பதிவு என் உணர்வுகளை புண்படுத்துகிறது என்றால் அதற்கு யாரும் பொறுப்பல்ல.

சமபாலுறவை எதிர்ப்பவர்கள் முன்வைக்கும் காரணங்கள்.
 1. "ஆணுக்கு பெண் / பெண்ணுக்கு ஆண் என்பதே இயற்கையானது. சமபாலுறவு இயற்கைக்கு மாறானது."

  முற்றிலும் தப்பான அபிப்பிராயம்+கருத்து. இயற்கையில் பல உயிரினங்கள் சமபாலுறவுத் தன்மையை வெளிப்படுத்துகின்றன. நீங்கள் அன்றாடம் காணும் பூனை முதல் கொண்டு சிங்கம் வரை சமபாலுறவுத் தன்மையை இயற்கையாகவே வெளிப்படுத்துகின்றன. விபரமான வாசிப்புக்கும் அறிவு விரிவாக்கத்திற்கும்: https://en.wikipedia.org/wiki/List_of_animals_displaying_homosexual_behavior

  சமபாலுறவு இயற்கையானது என்பதற்கு உதாரணமாக இயற்கையில் விலங்குகளின் நடத்தை பற்றி சுட்டியுடன் குறிப்பிட்டு இருந்தேன். மனிதர்களை விலங்குகளுடன் விட மேலானவர்கள் இல்லையா, நமக்கு சிந்திக்க பகுத்தறிவு இருக்கிறதே என்ற கேள்வி எழுந்தது. சமபாலுறவு இயல்பானது / இயற்கையானது அல்ல என்று கூறுபவர்களுக்கு இயற்கையிலேயே இவ்வாறு நிகழ்கிறது என்பதற்குத் சான்றாகத்தான் அந்த உதாரணமே தவிர, மனிதர்கள் விலங்குகளைப் போல நடந்து கொள்ளவேண்டும் என்பதற்காக அல்ல.

  இதற்கு மேலும் இது இயற்கை இல்லை என்று வாதிடுபவர்கள் தங்கள் வீடு, வாகனம், என அனைத்தையும் துறந்துவிட்டு குகைகளில் தங்கி வேட்டையாடி வாழலாம். ஏனேனில் இன்றைய வாழ்வில் மனிதன் பயன்படுத்தும் அனைத்தும் செயற்கையானவையே; இயற்கைக்கு எதிரானவையே!

 2. "இது ஒரு குணப்படுத்த வேண்டிய வியாதி, ஹார்மோன்களில் குழப்பத்தால்/மனப்பிறழ்வினால் வருவது."

  நிச்சயமாக இல்லை. இதுவரை மருத்துவ விஞ்ஞானத்தில் சமபாலுறவு இயற்கை நிலையாகவே கொள்ளப்படுகிறது. வியாதி என்று நினைப்பவர்கள் எந்த டாக்டரிடம்/கடையில் மருந்து இருக்கிறது என்று சொன்னால் நல்லது. எல்லா சமபாலுறவாளர்களையும் எடுத்துக் கொள்ளச் சொல்லலாம். அல்லது பிறக்கும் போதே போலியோ சொட்டு மருந்து போல போட்டுக் கொள்ளச் சொல்லலலாம். மருத்துவ விஞ்ஞானமே இன்னும் வளரவில்லை, மருத்துவ விஞ்ஞானத்தை விட தாம் சிறந்த அறிவாளிகள் என்று நினைப்பவர்கள், இது குறித்து ஆராய்ந்து மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடலாம் அல்லது ஒரு சிறந்த மனோதத்துவ நிபுணரை அணுகுவது நாட்டுக்கும் வீட்டுக்கும் நலம்.:P


 3. "இப்படியே எல்லோரும் சமபாலுறவாளர்களாய் மாறிவிட்டால் என்ன செய்வது"

  ஒன்றும் ஆகாது. எதிர்பாலுறவு (heterosexuality) எப்படி இயற்கையோ, அதுபோலவே சமபாலுறவும். ஒரு ஆணாக பெண் மீது ஈர்ப்பு ஏற்பட யாரும் எனக்கோ உங்களுக்கோ கற்றுத் தரவில்லை (புலி பசித்தாலும் புல்லை உண்ணாததை போல). அதே போல எதிர்பாலுறவு ஈர்ப்புள்ள ஒருவரால் சமபாலுறவாளராக மாற முடியாது. சமபாலுறவு ஈர்ப்பு பிறப்பின் போது உண்டாவது. சமபாலுறவாளர்களை சட்டரீதியாக அங்கீகரிப்பதன் மூலம் அவர்கள் மீது இடம் பெறும் அடக்குமுறைகள் ஒடுக்கல்கள் குறைந்து எல்லோரையும் போல அவர்களும் சாதாரணமாக வாழ்வை மேற்கொள்ள உதவும்.

  மூன்றாம் பாலினருக்கு (ஆண், பெண் அற்றவர் - transgender) சமூக அங்கீகாரம் அளிப்பதன் மூலம் எல்லோரும் மூன்றாம் பாலுக்கு மாறிவிட்டார்களா என்ன? இன்னும் மூன்றாம் பாலினரை வெறுத்து ஒதுக்கும் குடும்பங்கள் உள்ளன. மூன்றாம் பாலினராகவோ, சமபால ஈர்ப்புள்ளவராகவோ பிறந்தது அவர்களின் குற்றமா?
  சமூகத்திற்காக சமபால் ஈர்ப்புள்ள ஆணை/பெண்ணை கட்டாயப்படுத்தி இன்னொரு பெண்ணுடன்/ஆணுடன் திருமணம் செய்து வைப்பதால் இதுவரை எத்தனை பேரின் வாழ்க்கை சத்தமில்லாமல் 4 சுவற்றுக்குள் சீரழிந்து இருக்கிறது என்று நினைத்து பார்த்தால், ஏன் இதை சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகமும் அங்கீகரிக்கவேணடும் என்று புரியும்!

  நீங்கள் மூன்றாம் பாலினராக பிறந்துவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். சமூகத்தை பொறுத்தவரை ஆண், பெண் என்பதை மட்டுமே ஏற்றுக் கொள்ளும் எனில் எவ்வாறு சமூகத்தில் வாழ முடியும்? சமூகம் ஒதுக்குவதால் உங்கள் குடும்பமும் நண்பர்களும் ஒதுக்குவார்களாயின் என்ன செய்வீர்கள்? மூன்றாம் பாலினராகவோ சமபால் விருப்புள்ளவராக பிறந்ததோ ஒருவரின் குற்றமா..? அவர்களும் இயல்பாக வாழும் வகையில் சமூக அமைப்பை மாற்றவேண்டாமா?


 4. "இது என் சமயம்/கடவுள்/மார்க்கம் சார்ந்த நம்பிக்கைகளின் படி தவறானது". 

  ஒவ்வொரு சமயம்/கடவுள்/மார்க்கம் சார்ந்த விடயங்களில் எத்தனையோ குறைபாடுகளை கண்டிருக்கிறோம். அவை தவறு என்று விலக்கி சரியானதை கைக்கொண்டு வாழ்வது தானே மனித குல நாகரீகத்தின் வளர்ச்சி. உதாரணமாக சொல்வதானால் அடிமை என்பது இயற்கையானது(Slavery is natural condition) என்று ஒரு சமயநூல் கூறியிருக்கிறது, அதற்காக இன்னுமா அதை பின்பற்றுகிறோம்? பிற மதத்தை சேர்ந்தவர் என்பதற்காக கழுவேற்றிய காலம் ஒன்று இருந்தது. அதை இப்போது சரி என்று செய்ய முயல்கிறோமா? சக மனிதரை சமமாக மதிப்பதுவும் அனைவருக்கும் சம உரிமைகள் அளிப்பதுவுமாக நம் மனங்கள் வளரவில்லையா என்ன? சாதியம், தீண்டாமை, அடிமை முறைமை, நிறபேதம் சரி என்ற நம்பிக்கை தகர்தெறிந்து எல்லோரும் சமமாக வாழும் சமூககட்டமைப்புக்குள் வரவில்லையா?
  அடிப்படையில் அனைத்து உயிர்களிடத்தும் அன்பாயிருக்க உங்கள் சமயம்/மார்க்கம் /கடவுள் போதிக்கவில்லையா? இப்படி ஒரு மனிதரை அவர் வேறு ஒரு குழுமத்தை சார்ந்தவர் என்பதற்காகவே ஒதுக்குவது அந்த போதனைக்கு முரணான நடத்தையில்லையா?


 5. "சமபாலுறவாளர்களால் பிள்ளை பெற முடியாது. எனவே சமூக கட்டமைப்புக்கு முரணாணது.'

  இந்த பதிவை எழுதும் சமயத்தில் உலகின் சனத்தொகை 732 கோடியாக (7,324,809,900). இதில் 78.3 கோடி மக்களுக்கு குடிக்க சுத்தமான நீர் இல்லை. 250 கோடி மக்களுக்கு சுத்தமான கழிப்பறை வசதிகள் இல்லை. 80.5 கோடி மக்களுக்கு உண்பதற்கு உணவுப் பற்றாக்குறை இருக்கிறது. 
  வளங்கள்(நிலம், நீர், etc) மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. சனத்தொகை வளர்ச்சிக்கேற்ப வளங்களும் அதிகரிப்பதில்லை. வெறுமனே இனப்பெருகத்திற்காக சனத்தொகையை அதிகரிப்பதில் மனித குலத்திற்கு அபாயமே. இவ்வாறு பெருகும் சனத்தொகையை கட்டுப்படுத்த இயற்கையின் தன்னியைபான ஒரு கட்டுபாட்டு வழியாக கூட இருக்கலாம். 
   மேலும் இருக்கும் 15.3 கோடி சிறார்கள் அனாதைகள் ஆக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவரை தத்தெடுத்து தமது குடும்பத்தை பூரணப்படுத்திக் கொள்ளலாம்.


 6. "சமபாலுறவை அங்கீகரிப்பது, சமூக ஒழுக்கத்தை குலைக்கும். நோய்கள் பல பரவ வழிவகுக்கும்."

  சமபாலுறவுக்கு குடும்பங்களிலும் ஒருவனுக்கு ஒருவன், ஒருத்திக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம் பேணப்பட வேண்டும். சாதாரண குடும்ப வாழ்வின் ஒழுக்கங்கள் பின்பற்றப்பட வேண்டும். சம பாலுறவிலும் பிறமனைப்புணர்ச்சி (Adultery), சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வன்முறை, சம்மதமின்றி கட்டாயப்படுத்தல்கள் போன்றன தண்டணைக்குரிய குற்றங்கள் ஆக்கப்படும். அவர்களது திருமணத்தை அங்கீகரிக்காத பட்சத்தில் எப்படி பிறன்மனைபுணர்ச்சிக்காக தண்டிக்க முடியும்? அவர்களை ஒதுக்காமல் சமூகத்தில் சாதாரண மனிதர்களாக பார்க்கப்படவும், அவர்களது திருமணங்கள் அங்கீகரிக்கப்படவும் வேண்டும். சமபாலுறவினருக்கான அங்கீகாரம் என்பது அவர்கள் திருமணம், சமூகம் என்ற கட்டமைப்பிற்குள் வாழ வழங்கப்படும் அங்கீகாரமே தவிர எல்லோரையும் அவ்வாறு மாற/மாற்ற தூண்டும் நடவடிக்கை அல்ல. அதை மறுப்பது அவர்களுக்கான ஒழுக்கத்தை, சமூகத்துடன் இயைந்து வாழும் உரிமையை மறுப்பதாகும்.

  அங்கீகரிக்கப்படாத பட்சத்திலேயே இவை திரை மறைவில் நிகழ்வதால் ஒழுக்க சீர்கேடுகள் தலைதூக்கும். இதற்கு பொருத்தமான உதாரணம், பாலியல் தொழில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நாடுகளைக் காட்டிலும் திரைமறைவில் பாலியல் தொழில் நடைபெறும் நாடுகளில், எயிட்ஸ் போன்ற பாலுறவினால் பரவும் நோய்கள் அதிகம். அதுவும் புனிதம் என்ற பிம்பம் உடைய இந்தியா போன்ற நாடுகளில் இன்னமும் அதிகம். இங்கே சமூகத்தில் வாழும் ஆண்களும் பெண்களும் தூய்மையானவர்கள் என்றால், நுகர்வோர் இல்லாமல் எப்படி நுகர்வு பொருளும் வழங்குனரும் மேலும் பக்கவிளைவான எயிட்ஸ்சும் உண்டாகிறது என்பதை உங்கள் அறிவிற்கே விட்டுவிடுகிறேன். நிஜத்தை அங்கீகரித்து அதனை சரியாக கையாள்வதுவும், இல்லை என்று மறுத்து கண்ணை மூடிக் கொண்டு போலியாக வாழ்வதுவும் உங்களது கைகளிலேயே உள்ளது. 


  சாதியம், அடிமை முறைமை, தீண்டாமை என்பது எல்லாம் ஒழுக்கமுறையாக சரியானது (morally right) என்று நம்பிக் கொண்டு இருந்த சமூகத்தில் முதன் முதலில் அடிமை ஒழிப்பு, சுதந்திரம், தாழ்த்தப்பட்டவர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படல், கலப்பு திருமணம் வந்த போது அநேகரின் உணர்ச்சி வெளிப்பாடுகள் எப்படி இருந்தனவோ அப்படியே இன்றும் சமபாலின திருமணங்கள் குறித்தான பெரும்பாலான கருத்துக்களும் உணர்ச்சி வெளிப்பாடுகளும் இருக்கின்றன. இரண்டு, மூன்று தசாப்தத்திற்கு முன்னர் காதலிப்பது தவறானது, ஒழுக்ககேடானது என்ற நிலை இருந்தது. இப்போது காதலித்து ஒருவரை ஒருவரை் புரிந்து கொண்டு கரம் பிடிப்பதே சிறந்தது எனும் அளவிற்கு நிலை மாறிவிட்டது.
  தவறு என்று நினைக்கப்பட்ட ஒரு விடயமோ, அல்லது முன்னர் கேள்வியுறாத புதிய விடயம் ஒன்றோ சட்டரீதியாக அங்கீகரிப்படும் போது சமூகம் கலாச்சார அதிர்ச்சிக்கு (Cultural Shock) உட்படும். அதையே தமிழ் சமூகமும், தமிழ் சமூகத்தைப் போன்ற மிகுந்த சட்டதிட்டங்கள் நிறைந்த மூடிய தன்மையுடைய சமூகங்களும் எதிர் கொண்டிருக்கும் தற்போதைய நிலையாகும்.

  ஒரு தன்னிலை விளக்கம்: உணர்ச்சிவசப்பட்டு, முன்முடிவுகளோடு சமபாலுறவு என்பதை நோக்காமல், சார்புகள் இன்றி திறந்த மனதோடு தர்க்கத்தின் அறிவின் அடிப்படையில் பார்ப்பதற்கு, விளங்கிக் கொள்வதற்கு ஒரு கலந்துரையாடுவதற்கான வௌியை /சந்தர்ப்பத்தை உருவாக்குவதே கடந்த வாரத்தில் இட்ட நிலைத்தகவல்களின் அடிப்படையும் பின்புலமும் ஆகும். தவிர யாருடைய நம்பிக்கையையும் புண்படுத்துவதோ, பேஸ்புக்கில் லைக் வாங்குவதோ, மேற்கு நாடுகளுக்கு வால் பிடிப்பதோ, உலகின் போக்கிற்கு(current world trend) ஓடுவதோ, அறிவாளி என்ற பிம்பத்தை உண்டாக்குவதோ, நண்பர்களின் வெறுப்பையும் கோபத்தையும் சம்பாதித்து கொள்வதோ நோக்கமல்ல!